அக்னி குலத்தின் தோற்றம்

உயர்குடி வகுப்பினர்களான “க்ஷத்ரியர்கள்”வேள்வித் தீயில் இருந்து பிறந்தவர்கள் என்பது ஐதீகமாகும். அதாவது அவர்களது முன்னோர்களின் மூலவர் அக்னி குண்டத்தில் இருந்து உதித்தவர்கள் என்பது புராணத்தின் கூற்றாகும். சங்கப்புலவர் கபிலரும் இதை புறநானூற்றுப் பாடல்கள் மூலம் மிகத் தெளிவாக நமக்கு உறுதிப்படுத்துகிறார்கள். பிற்காலப் புலவரான “கம்பரும்”, “இரட்டைப் புலவர்களும்” இதைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்கள்.
அரியலூர் மாவட்டம் ஊட்டத்தூரில், திருபுவனச் சக்கரவர்த்தி மூன்றாம் குலோத்துங்கச் சோழனின் 40 வது ஆட்சியாண்டு கல்வெட்டு (1218 A.D) வேள்வித் தீயில் பிறந்த “சுருதிமான் முப்பனார் சமூகத்தவர்களைப்” பற்றி குறிப்பிடுகிறது. சுருதிமான்கள் காசியப்ப முனிவரது வேள்வி குண்டத்தில் இருந்து பிறந்து இரண்டு அரக்கர்களை அழித்தார்கள் என்றும் அவர்கள் “இடங்கை வகுப்பினர்கள்” என்றும் அக் கல்வெட்டு குறிப்பிடுகிறது. சுருதிமான்கள் தங்களது பூர்வீக வரலாற்றை, அதாவது வேள்வித் தீயில் இருந்து பிறந்தவர்கள் என்பதினை அறியாமையின் காரணமாக மறந்திருந்தார்கள் என்பதையும் அச் சோழர் காலத்துக் ஊட்டத்தூர் கல்வெட்டு மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது.
சுருதிமான்கள் குறிப்பிடும் “வேள்வித் தீயில் பிறந்த வரலாறு” என்பது “வன்னிய புராணத்தின்” சாராம்சமாகும். சம்பு மாமுனிவன் வேள்வித் தீயில் இருந்து வன்னியர்கள் பிறந்தார்கள் என்று வன்னிய புராணம் குறிப்பிடுகிறது. வன்னியர்களையும்சுருதிமான்களையும் போலவே நத்தமான் உடையார்களும் “குக முனிவரது வேள்வித் தீயில் இருந்து பிறந்து இரண்டு அரக்கர்களை அழித்தார்கள்” என்று குறிப்பிடுகிறார்கள்.
எனவே “வன்னியர்கள்”, “சுருதிமான்கள்”மற்றும் “நத்தமான்கள்” உயர்குடி “க்ஷத்ரிய மரபினர்கள்” ஆவார்கள். வேளிர் மரபினர்களான ஹோய்சாலர்களும்,சாளுக்கியர்களும், ராஷ்டிரகூடர்களும், தங்களை “அக்னியில் இருந்து பிறந்த க்ஷத்ரியர்கள்” என்று குறிப்பிடுகிறார்கள். மேலும் தங்களை “யது வம்சம்” (யாதவர்) என்றும் குறிப்பிடுகிறார்கள். வன்னியர்களான பிற்கால மலையமான் மன்னர்கள் தங்களை “வன்னிய நாயன்” என்றும் “வன்னிய மக்கள் நாயன்” என்று “வன்னியன்” என்றும் “பள்ளி” என்றும் “பார்கவ கோத்திரம்” என்றும் “யாதவ குல வீமன்” (யாதவ குலத்திற்கு பீமன் போன்றவன்) என்றும் குறிப்பிடுகிறார்கள். சேரர்களின் கிளைக் குடியினரான மலையமான்களைப் போலவே சேரர்களையும் “அக்னி குலம்” (செந்தழலோன் மரபாகி ஈரேழு உலகும் புகழ் சேரன்) என்றே வரலாறு குறிப்பிடுகிறது. சேர மன்னர் குலசேகர ஆழ்வார், யது குலம் (என்னும்) யாதவ குலத்தில் அவதரித்த கிருஷ்ண பகவானைக் “எங்கள் குலத்தில் பிறந்தவரே” என்று “நாலாயிர திவ்ய பிரபந்தம்” பாசுரத்தில், ஆலைநீள் கரும்பு என்ற பாடலில் குறிப்பிட்டுள்ளார்கள்.
அரச மரபினர்களான இவர்கள் அனைவரும், பண்பாடு காலச்சாரம் மிகுந்த “சிந்து சமவெளி பகுதியில்” இருந்து மிகப் பண்டைய காலத்திலேயே “தமிழ் மொழியோடு” தென்னாடு வந்திருக்கின்றனர் என்பது சங்கப் புலவர் கபிலர் அவர்களது புறநானூற்றுப் பாடல் (201 & 202) வரிகளால் நமக்கு தெரியவருகிறது.
துவாரகையில் இருந்து அரசர்களும் வேளிர்களும் தமிழகம் வந்ததாக நச்சினார்க்கினியர் தொல்காப்பியப் பாயிரயுரையிலும்மற்றும் அகத்திணையியல் 32 ஆம் நூற்பாவுரையிலும் கூறியுள்ளார்கள்.
வாழ்க “வேள்வித் தீயில் பிறந்த க்ஷத்ரிய மரபினர்கள்”.
—– xx —– xx —– xx —-

Advertisements