கருணாகரத் தொண்டைமான்

பல்லவர்கள் பல கல்வெட்டுகளிலும் /செப்புபட்டையங்களிலும் “க்ஷத்ரியர்” என்றே குறிப்பிடப்படுகின்றனர். கி.பி. 12 ஆம் நூற்றாண்டின் இலக்கியமான கலிங்கத்துப்பரணியும், பல்லவர் கோன் கருணாகரத் தொண்டைமானை “க்ஷத்ரியர்” என்றே குறிப்பிடுகிறது.
கலிங்கத்துப்பரணியில், காளிக்குக் கூளி கூறியது-30 வது கவியில், புலவர் ஜெயங்கொண்டார் அவர்கள், பல்லவர் கோன் வண்டை வேந்தன் கருணாகரத் தொண்டைமானை :-
“மறைமொ ழிந்தபடி மரபின் வந்தகுல
திலகன் வண்டைநகர் அரசன்”
என்று தெரிவிக்கிறார்.அதாவது மறையான வேதங்கள் வகுத்த “நால் வருணத்தில்” இரண்டாவது வருணமான “க்ஷத்ரியர் குலத்தில் உதித்த வண்டைநகர் அரச திலகமே” என்று புலவர் ஜெயம்கொண்டார் அவர்கள் தெரிவிக்கிறார்கள்.
கவிச் சக்கரவர்த்தி கம்பர் எழுதிய வன்னியர் புகழ் பாடும் “சிலை எழுபது” என்ற நூலில் “பல்லவர் கோன் கருணாகரத் தொண்டைமான்” அவர்கள் வன்னியர் குலத்தில் உதித்தவர் என்று போற்றப்படுகிறார். சோழர்கள் காலத்தில் ஆட்சி செய்த காடவர்கள் (பல்லவர்கள்) வன்னிய மரபினர்கள் என்பதை சான்றுகள் பகர்வதால், சிலை எழுபது குறிப்பிடும் கருணாகரத் தொண்டைமானும் “வன்னியர் மரபினரே” என்று முடிவுகாணப்படுகிறது.
சிலை எழுபதின் கூற்று உண்மை தான் என்பதை “பல்லவர்களான அறந்தாங்கித் தொண்டைமான்களின்” கல்வெட்டுகளும் /செப்புபட்டயங்களும் நமக்கு சான்று பகர்கின்றன.
அறந்தாங்கித் தொண்டைமான்கள் தங்களை “கலிங்கம் திறைகொண்ட கருணாகரனின் வம்சத்தவர்கள்” என்றும் “கலிங்கத் திறைகொண்டு பரணி புனைந்தோன்” என்றும் குறிப்பிடுகிறார்கள். இது அவர்களை “கலிங்கம் வென்ற கருணாகரத் தொண்டைமானின் வம்சத்தவர்கள்” என்பதை உறுதிபடுத்துகிறது.
மேலும் அவர்கள், தங்களை “கம்பன் தமிழுக்குச் செம்பொன் அளித்தோன்” என்று பண்ணைவயல் செப்பேட்டில் குறிப்பிடுகிறார்கள். இது மிக மிக முக்கியமான சான்றாகும். அறந்தாங்கித் தொண்டைமான்கள், கவிச் சக்கரவர்த்தி கம்பர் எழுதிய வன்னியர் புகழ்பாடும் “சிலை எழுபதிற்கு” செம்பொன் அளித்தவர்கள் என்பதை குறிப்பிடவே தங்களை “கம்பன் தமிழுக்கு செம்பொன் அளித்தோன்” என்று செப்பேட்டில் குறிப்பிடுகிறார்கள்.
சிலை எழுபது என்ற வன்னியர் புகழ் பாடும் நூல் எழுதியதற்காக, கருணாகரத் தொண்டைமான் அவர்கள் புலவர் கம்பர் அவர்களுக்கு “ஆயிரம் பொன் பரிசு” கொடுத்தார்கள் என்பதை “சிலை எழுபது” பாடல் – 68 குறிப்பிடுகிறது:-
“கவிக்கா யிரம்பொன் பரிசளித்தான்
கருணா கரத்தொண்ட வன்னியனே”
எனவே, அறந்தாங்கித் தொண்டைமான்கள் குறிப்பிடும் “கம்பன் தமிழுக்குச் செம்பொன் அளித்தோன்” என்பது “சிலை எழுபதிற்கு” பரிசு கொடுத்ததையே குறிப்பிடுவதாகும்.
“சிலை எழுபது” என்ற நூலிற்கு முழுப்பெயர் “செம்பொன் சிலை எழுபது” என்பதேயாகும். இதை கிழ்காணும் “சிலை எழுபதின்” பாடல் நமக்கு மிகத் தெளிவாக குறிப்பிடுகிறது:-
“முந்துநாள் வீர சம்பு முனிசெய்மா மகத்திற் போந்த
சந்ததி யார்சீ ரோது கெனத்தகு முதியோர் கேட்ப
இந்தணி சடிலத் தெம்மான் இணைக்கழல் பராஅய் இசைத்தான்
செந்தமிழ்க் கம்பன் செம்பொற் சிலையெழு பதுவாம் இந்நூல்”
சூரிய குலத்தைச் சார்ந்த “அறந்தாங்கி தொண்டைமான்கள்” வன்னிய குல க்ஷத்ரிய சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள். அறந்தாங்கி தொண்டைமான்கள் “அழுஞ்சியேந்தல்செப்பேடு” மற்றும் “கிழ்ப்பாப்பனூர்ச் செப்பேட்டில்” தங்களை “சூரிய குலத்தில் தோன்றிய வள்ளல்” என்றும் ஏனாதிச் செப்பேட்டில் “சூரிய வங்கிச திலகன்” என்றும் குறிப்பிடுகிறார்கள்.
அறந்தாங்கி தொண்டைமான்கள் “பிறாந்தனில் ஏந்தல்கள் குறிச்சிகள் செப்பேட்டில்” தங்களை “முகிலின் கிழ்திரியும் இள வன்னிய மகா கண்டன்” என்று குறிப்பிடுகிறார்கள். அதாவது “மேகத்தில் திரியும் இளம் சூரியனை போன்ற மகா கண்டன்” என்பதாகும். எனவே “இள வன்னிய” என்பது “இளம் சூரியன்” என்று பொருள்படும். அறந்தாங்கி தொண்டைமான்கள் “வன்னியராகிய சூரிய குலத்தவர்கள்” ஆவார்கள்.
இதைப்போலவே புதுக்கோட்டை மாவட்டக் கல்வெட்டிலும் தங்களை பற்றிக் குறிப்பிடுகிறார்கள். அதில் “முகிலின் கிழ்திரியும்” என்ற பகுதி சிதைந்து காணப்படுகிறது. ஆலங்குடி தாலுகா திருவரங்குளம் மற்றும் மணியம்பலம் கல்வெட்டுகளில்,அறந்தாங்கி தொண்டைமான்கள் தங்களை “இள வன்னியர் மீசுர கண்டன்” என்று குறிப்பிடுகிறார்கள் (I.P.S. No.738 & 845). இவற்றின் மூலம் இவர்கள் “வன்னிய குல க்ஷத்ரிய” சமூகத்தைச் சேர்ந்தவர்கள் என்பதை அறியமுடிகிறது.
மேலே குறிப்பிடப்பெற்ற அடிப்படை சான்றுகளின் மூலம் “கலிங்கம் வென்ற கருணாகரத் தொண்டைமான்” அவர்கள் “வன்னிய குல க்ஷத்ரிய” சமூதாயத்தைச் சேர்ந்தவர் ஆவார் என்பது உறுதியாகிறது.
—– xx —– xx —– xx —–

Advertisements