வாணாதிராயர்கள்-1

வாணர்கள் சங்க காலம் தொட்டு கி.பி.17 ஆம் நூற்றாண்டு வரை ஆட்சி செய்த பரம்பரையினர் ஆவார்கள். மாபலிச் சக்கரவர்த்தியின் வழியில் வந்தவர்கள் என்று தங்களைக் கூறிக் கொண்ட இவர்கள் “மாவலிவாணாதிராயர்” என்று தம்மை பெயரிட்டு அழைத்துக் கொண்டார்கள். கல்வெட்டுக்களில் இவர்கள் வாணர் என்றும் பாணர் என்றும் மாறிமாறி அழைக்கப்பட்டிருக்கின்றனர். இவர்கள் பல பேரரசர்களின் கிழ் சிற்றரசர்களாகவும் அரசியல் அதிகாரிகளாகவும்விளங்கினார்கள்.
இத்தகைய வாணர்கள் எந்த மரபினைச் சார்ந்தவர்கள் என்பதை பற்றி விளக்குவதே இந்த கட்டுரையின் நோக்கம் ஆகும். முதலாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி.1070 – 1120) கிழ் பணிபுரிந்த ஒரு “வாணர் குல ஸேநாபதியின்” பெயர் பொறித்த கல்வெட்டு ஒன்று காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகம் வட்டத்தில் உள்ள ஸ்வேதாரண்ய ஈஸ்வரர் கோயிலில் அமைந்துள்ளது. அது :-
“மதுராந்தகச் சதுர்வேதிமங்கலத்துப் பள்ளி செங்கேணி
சாத்தன் சொழனான ஸெநாபதிகள் வாணராஜர்
நம்மூர் எடுப்பித்த திருக்கற்றளி திருவெண்காடுடைய
மஹாதெவர்க்கு” (Line – 2). (S.I.I Vol-V, No.1003), (Kadapperi, Madurantakam Taluk, SvetaranyesvaraTemple, Kulottunga Chola – I).
என்று குறிப்பிடுகிறது. இக் கல்வெட்டின் மூலம் இவர் ஒரு வன்னிய வகுப்பினைச் சார்ந்தவர் என்று தெரியவருகிறது.
பிற்காலச் சோழர் கல்வெட்டுக்களில் “வாணர்கள்” ஸேநாபதிகளாக விளங்கியுள்ளார்கள் என்று அறிய முடிகிறது. குறிப்பாக முதலாம் இராஜேந்திரச் சோழன் கல்வெட்டுக்களில் “ஸேநாதிபதி வாணராஜர் என்ற செம்பியன் மாவலிவாணராயர்” குறிப்பிடப்படுகிறார். இவர் “இராஜேந்திர சோழ மாவலிவாணராயன்” என்றும் அழைக்கப்பெற்றார்.
முனைவர் திரு. எம்.எஸ். கோவிந்தசாமி அவர்கள் வாணர்களைப் பற்றிய ஆய்வு செய்ததில் ஒரு முக்கிய குறிப்பை தந்துள்ளார்கள்.அது முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி.1070 – 1120) ஆட்சி காலத்தில் சிறப்புற்றிருந்த வாணர் குலத் தலைவர் “வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்” என்பவன் இருந்தான் என்றும் அவன் “சுத்தமல்லன் சோழகுல சுந்தரனான கங்கைகொண்ட சோழ வாணகோவரையன்” என்றும் அறியப்பட்டான் என்று தெரிவித்திருக்கிறார். மேலும் முனைவர் திரு. எம்.எஸ். கோவிந்தசாமி அவர்கள், “வாணாதிராஜா” என்பவன் முதலாம் குலோத்துங்கச் சோழனின் அமைச்சனாக திகழ்ந்தான் என்றும், மேற்குறிப்பிட்ட”இலங்கேஸ்வரன்” தான் “பள்ளி செங்கேணி சாத்தன் சோழனான ஸேநாபதிகள் வாணராஜர்” என்பது சில காரணங்களால் தெரியவில்லை என்று குறிப்பிடுகிறார்.
“பள்ளி செங்கேணி சாத்தன் சோழனான ஸேநாபதிகள் வாணராஜர்” என்று பயின்று வரும் அதே கல்வெட்டுத் தொடரின் பிறிதொரு பாகத்தில் (வரிகள்-3) அவனை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறது. அது :-
“இச் சாத்தன் வீரசோழனான வாணராஜர்” என்பதாகும்.
வீர சோழன் என்ற பெயர் முதலாம் குலோத்துங்கச் சோழனுக்குக் கிடையாது. ஆனால் அவனுக்கும் மதுராந்தகிக்கும் பிறந்த ஆண்மக்களில் “வீர சோழன்” என்று ஒருவன் இருந்துள்ளான். அவனுடைய திருநாமப் பெயரான வீர சோழன் என்பதை இந்த வாணகோவரையன் தன்னுடைய பெயரில் இணைத்துக்கொண்டு”வீர சோழனான வாணராஜர்” என்று அழைத்துக் கொண்டிருக்கிறார் போலும். மேலும் அதே கல்வெட்டுத் தொடரில் “வீர சொழச்சேரி மஹாதிசை” என்று பயின்று வருவதால் அவன் வீர சோழன் பெயரில் ஒரு ஊரும் அமைத்திருக்கிறான் போலும்.
முதலாம் குலோத்துங்கச் சோழன் அமைச்சரவையில் வாணர் தலைமையில் இடம் பெற்றிருந்த அமைச்சர் “வாணாதிராஜர்” என்று தெரியவருவதால் அவ் “வீரசோழனான வாணராஜர்” ஒருவனாகவே இருத்தல் வேண்டும். ஆனால் அக்கால கல்வெட்டுகளில் அவன் பல பெயர்களில் அழைக்கப்பட்டுள்ளான். அதில் சில :-
“மதுராந்தக சதுர்வேதிமங்கலத்துப் பள்ளி செங்கேணி
சாத்தன் சோழனான ஸேநாபதிகள் வாணராஜர்”
“சாத்தன் வீரசோழனான வாணராஜர்”
மேலும் இவன் “ஸேநாபதி” என்று குறிப்பிடப்படுவதால் அதுவும் வாணர்கள் ஆட்சிப் புரிந்த (தலைநகர்) மதுராந்தக வளநாட்டுப் பகுதியில் இக் கல்வெட்டு இடம்பெறுவதால் இவன் முதலாம் குலோத்துங்கச் சோழன் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த “வாணர் குல ஸேநாபதியே” என்று முடிவு காணப்படுகிறது.
முதலாம் குலோத்துங்கச் சோழனின் (கி.பி.1070 – 1120) ஆட்சி காலத்தில் “வாணகோவரையன் சுத்தமல்லன் உத்தம சோழனான இலங்கேஸ்வரன்” என்பவரும் அவரது மகன் “சுத்தமல்லன் முடிகொண்டானான விருதராசபயங்கர வாணகோவரையன்” என்பவரும் இருந்திருக்கிறார்கள். இந்த “சுத்தமல்லன் முடிகொண்டான்” என்பவர் விக்கிரம சோழனின் திருவாரூர் கல்வெட்டில் “குலோத்துங்கச் சோழ மகாபலி வாணராஜன்” என்று அறியப்பட்டார்கள் என்பதை முனைவர் திரு. எம். எஸ். கோவிந்தசாமி அவர்கள் குறிப்பிடுகிறார்கள். மேலும் முனைவர் அவர்கள், “வீரநாராயண மாவலி வாணராயர்” என்பவர் விக்கிரம சோழனின் (கி.பி.1118 – 1135) ஆட்சி காலத்தில் குறுநில மன்னனாக திகழ்ந்தான் என்பதையும் குறிப்பிடுகிறார்கள்.
பள்ளி குலத்தை சேர்ந்த “சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையனைப்” பற்றி முனைவர் இல. தியாகராஜன் அவர்கள் கல்வெட்டில் (NDI No.169) குறிப்பிடுகிறார்கள். இந்த “பள்ளி சேந்தன் சுத்தமல்லன் வாணகோவரையன்” என்பவர் சென்னிவனம் கோயிலுக்கு கி.பி.1137 இல் நிலதானம் கொடுத்துள்ளார்கள். எனவே “பள்ளி சேந்தன் சுத்தமல்லன் வாணகோவரையன்” என்பவர் விக்கிரம சோழன் (கி.பி.1118 – 1135) காலத்தில் ஆட்சி செய்தவராவார்கள்.
“பள்ளி சேந்தன் சுத்தமல்லனான வாணகோவரையன்” என்பவரே விக்கிரம சோழனின் (கி.பி.1118-1135) ஆட்சி காலத்தில் இருந்த வாணர் குல குறுநில மன்னரான “வீரநாராயண மாவலி வாணராயராக” இருக்குமோ என்ற கருத்து வலுபெறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி வட்டம் கோவிலூர், வாணபுரிஸ்வரர் கோயில் கல்வெட்டு மாவலி வாணராயர்களை “வன்னியர்கள்” என்று தெரிவிக்கிறது. அது :-
“நெடுவாசலில் வன்னியரில் மாவலிவாணராயர்
மக்களில் பெற்ரு . . . கள் காலிங்கராயரும்”
(I.P.S. No.971), (ஆலங்குடி தாலுகா, கோவிலூர்).
மேலும் அதே பகுதியை சேர்ந்த மற்றொரு கல்வெட்டு மேற்குறிப்பிட்டகல்வெட்டுச் சான்றுக்கு பக்கபலமாய் அமைகிறது.